கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?



கேள்வி: கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?

பதில்: இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதை அறிந்து கொள்ளவேண்டும். சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிரியப்படுத்த வேண்டுமென்பதை விளக்குவதாயும் (உதாரணமாக, பத்து கட்டளைகள்). சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும், பாவ நிவர்த்திக்கான வழியை விளக்குவதாகவும் இருக்கின்றன (பலிகள் பற்றிய ஒழுங்கு). மேலும், சில சட்டங்கள் இஸ்ரவேலரை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க ஏற்படுத்தப்பட்டன (உணவு மற்றும் உடைகள் சார்ந்த சட்டங்கள்). ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒன்றும் இன்று நம்மைக் கட்டுப்படுத்துகிறதில்லை. இயேசு சிலுவையில் மரித்த போது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15).

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக, நாம் கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 6:2), அதாவது “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக... உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37-39). நாம் இந்த இரண்டு கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தால், கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றி விடுகிறோம்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத்தேயு 22:40). இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பெரும்பாலனவை கட்டளைகள் “தேவனிடத்தில் அன்புகூருவாயாக” மற்றும் “பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கி விடுகின்றன.

நாம் தேவனிடத்திலும் பிறரிடத்திலும் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்பதை நன்கு விளக்குகிற ஒரு வழிகாட்டியே பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் என்று சொன்னால் அது தவறு. நியாயப்பிரமாணத்தின் ஒரு சில சட்டங்கள் இன்று நமக்குப் பொருந்தும் என்று சொல்வதும் தவறு. ஏனென்றால் கிறிஸ்துவானவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றினார்.

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல (1 யோவான் 5:3). பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் இரத்தினச்சுருக்கமே பத்துக் கட்டளைகள். பத்துக் கட்டளைகளில் ஒன்பது புதிய ஏற்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ஓய்வு நாள் ஆசரிப்பு தவிர). நாம் தேவனில் அன்புகூருவோமானால் நிச்சயமாகவே நாம் அன்னிய தேவர்களை வணங்கவோ விக்கிரங்களுக்கு முன்பாக தலை வணங்கி நிற்கவோ மாட்டோம். இதே போல, நாம் பிறரை நேசிப்போமானால் சக மனிதர்களுக்கு விரோதமாக கொலை, பொய், விபச்சாரம், பொருள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பிரதான நோக்கமாவது நம்மால் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க முடியாதென்பதை உணர்த்தி நமக்கு இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் தேவை என்பதை விளக்குவதேயாகும் (ரோமர் 7:7-9; கலாத்தியர் 3:24). பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒருபோதும் உலகாளவிய அளவில் எல்லா மக்களுக்கும் எல்லா கால கட்டத்திற்கும் உகந்த ஒரு சட்டமாக தேவனால் நியமிக்கப்படவில்லை. நாம் தேவனையும் பிறரையும் நேசிக்கவேண்டும். இவ்விரண்டு கட்டளைகளையும் உண்மையாகக் கடைபிடிப்போமானால் நிச்சயமாகவே தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற அனைத்தையும் நாம் நிறைவேற்றிவிடுவோம்.

Source: www.gotquestions.org

Comments

  1. Praise the lord paster,pazhaya yerpadil aasaripu koodaram yentu ontru undallava, puthya yerpadil adhanudaya aavikuria vilakkam yenna yenpathai arithomanal nyayapiramamnam viswasa pramanamai nam aaviyal yezhathapattirupathai nantaga ariyamudiyum.puthiya yerpattil naammalva avarudaya aavikkuria koodaram.

    ReplyDelete

Post a Comment